பைடனை சதி செய்து துாக்கிட்டாங்க; திடீர் பாசத்தை பொழிந்த டிரம்ப்
பைடனை சதி செய்து துாக்கிட்டாங்க; திடீர் பாசத்தை பொழிந்த டிரம்ப்
ADDED : ஆக 14, 2024 07:48 AM

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக்கப்பட்டது திட்டமிட்ட சதி,'' என, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் களம் இறக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன், போட்டியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
துணை அதிபர் வேட்பாளராக இருந்த கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளரானார். இதையடுத்து, அதற்கு முன்பு வரை ஓங்கியிருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பின் கை சரிய துவங்கியது. தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கான ஆதரவு அதிகரிக்க துவங்கியது.
இந்த நேரத்தில், முன்னாள் அதிபர் டிரம்பை கைதுாக்கிவிட முடிவு செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், தனக்கு சொந்தமான எக்ஸ் சமூகவலைதளத்தில், டிரம்பை நேற்று நேர்காணல் செய்தார். ஒலி வடிவில் இது நேரலையில் ஒலிபரப்பானது.
அதில் டிரம்ப் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பைடன் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டுள்ளார். இது கிட்டத்தட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கு இணையானது. இதில் மிகப் பெரிய சதி உள்ளது. அதன் காரணமாகவே, தேர்தல் போட்டியில் இருந்து பைடன் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பைடனுக்கும், எனக்கும் நடந்த விவாதம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதில் நான் அவரை மிக மோசமாக வீழ்த்தினேன். அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகச் சிறந்த விவாதங்களில் அதுவும் ஒன்று. இதன் காரணமாகவே ஜனநாயக கட்சியினர் அவரை ஒரங்கட்டி வெளியேற்றிவிட்டனர்.
நான் அதிபராக இருந்திருந்தால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்காது. ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் தங்கள் நாட்டை பெரிதும் நேசிக்கின்றனர். ஆனால் அது வேறு விதமான பற்று. அவர்கள் ஆட்சியின் உயரத்தில் உள்ளனர். அவர்களை சமாளிக்க வேண்டுமெனில் அமெரிக்காவுக்கு மிக சக்தி வாய்ந்த அதிபர் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
எக்ஸ் தளத்தில் நேரலையில் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு துவங்கியபோது, 'சைபர்' தாக்குதலால் எக்ஸ் தளம் முடங்கியது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது.