பதிலுக்கு பதில் வரி விதிப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடாப்பிடி
பதிலுக்கு பதில் வரி விதிப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடாப்பிடி
ADDED : பிப் 15, 2025 12:11 AM

வாஷிங்டன்: “அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிக்கு நிகராக, பதில் வரி விதிப்பதில் இருந்து பின்வாங்க மாட்டேன்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 - 24 வரை, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடு அமெரிக்கா. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதத்தில், இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 7.18 லட்சம் கோடி ரூபாய்.
இதில் அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி 4.60 லட்சம் கோடி ரூபாய், இறக்குமதி 2.58 லட்சம் கோடி. அதாவது, இறக்குமதி செய்ததைவிட, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது கிட்டத்தட்ட இருமடங்கு.
வர்த்தகப் பற்றாக்குறை, கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவுக்கு சாதகம்.
சரிசெய்ய முடிவு
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18 சதவீதம். மொத்த இறக்குமதியில் பங்கு 6.22 சதவீதம்.
இதுபோல, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமெரிக்க இறக்குமதி அதிகமாகவும்; அந்நாடுகளின் அதிக வரி விதிப்பால் ஏற்றுமதி குறைவாகவும் இருப்பதை சரிசெய்ய முடிவெடுத்தார் டிரம்ப்.
ஆட்சிக்கு வந்ததும் மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து எல்லா பொருட்களின் இறக்குமதி மீதும் 25 சதவீத வரி விதித்தார்.
பின்னர், அதை மார்ச் 1ம் தேதி வரை நிறுத்தி வைத்தார். சீனப் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார் டிரம்ப். இது மார்ச் 12 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதனால், இந்திய உருக்கு தயாரிப்பாளர்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல சவால்களை சந்திக்க நேரிடும் என்கிறது, மூடிஸ் தர ஆய்வு நிறுவனம்.
பதிலுக்கு பதில்
கடந்த 2018ல், இந்திய உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்கா, இறக்குமதி வரியை அதிகரித்தது. பதிலடியாக, 29 அமெரிக்கபொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை அதிகரித்தது.
உள்நாட்டில் பொருட்கள் விலை உயரும் என்றபோதிலும், வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க, நாடுகள் இதை செய்கின்றன. இதனால், இறக்குமதி குறைந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் வழி ஏற்படுகிறது.
பிடிவாதம்
இறக்குமதி வரியை அதிகரிப்பதில் டிரம்ப் உறுதியாக இருக்க காரணம், சீனா, இந்தியா போன்ற உற்பத்தி நாடுகளில் இருந்து அதிக இறக்குமதி நடைபெறுவதால், இருதரப்பு வர்த்தகத்தில் சமனில்லாத சூழல் ஏற்படுகிறது.
இதனால், அமெரிக்க உற்பத்தி பாதித்து, உள்நாட்டு வேலைவாய்ப்பும் குறைவதால், இறக்குமதியை குறைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
நியாயமற்ற விமர்சனம்
இந்தியாவை வரிவிதிப்பு மன்னன் என்றும், வரிவிதிப்பு ஏய்ப்பாளர் என்றும் டிரம்ப் விமர்சித்தார்.
ஆனால், இந்தியாவுக்கு நிகராக அல்லது அதைவிட அதிகமாக, அமெரிக்க அரசும் இறக்குமதி வரி விதிப்பதாகவும்; இந்தியா மீதான அவரது விமர்சனம் நியாயமற்றது எனவும், பொருளாதார நிபுணத்துவ அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்துள்ளது.
நாடுகள் இடையே வரி விதிப்பில், உலக வர்த்தக அமைப்பு நிர்ணயித்துள்ள விதிகளை இந்தியா முறையாக பின்பற்றுவதாகவும் அது தெரிவித்துள்ளது.
887 சதவீத வரி!
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகள், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அதிகபட்சமாக 887, 457, 350 சதவீத வரி விதிப்பதாக, ஜி.டி.ஆர்.ஐ., நிறுவனர் அஜய் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி, அதன் உறுப்பு நாடுகள், தங்கள் பொருட்கள் மீதான வரி விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதைத் தாண்டி வரி விதிக்கப்பட்டால், அது விதிமீறலாக கருதப்படும்.