இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மீறியது பெரும் தவறு: நவாஸ் ஷெரீப் வருத்தம்
இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மீறியது பெரும் தவறு: நவாஸ் ஷெரீப் வருத்தம்
ADDED : மே 30, 2024 12:40 AM

லாகூர், ''இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை மீறி, ஊடுருவ முயன்றோம். அது பாகிஸ்தான் செய்த மிகப் பெரும் தவறு,'' என, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் பிரிவின் தலைவராக, ஆறாண்டுக்குப் பின் மீண்டும் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
நெருக்கடி
ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஆட்சியை இழந்த இவர், கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியிருந்தார்.
கட்சி தலைமை பொறுப்பை ஏற்ற அவர் லாகூரில் பேசியதாவது:
கடந்த, 1998 மே, 28ம் தேதி நாம் அணு ஆயுதச் சோதனையை நடத்தினோம். அதன், 26வது ஆண்டில், கட்சி தலைமை பொறுப்பை ஏற்கிறேன். அந்த நேரத்தில், அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், பாகிஸ்தானுக்கு பெரும் நிதியுதவி அளிப்பதாகவும், அணு ஆயுதச் சோதனையை நிறுத்தும்படியும் கூறினார்.
முன்னாள் பிரதமரான இம்ரான் கான் அப்போது பிரதமராக இருந்திருந்தால், அவர் அதை ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு நாங்கள் மசியவில்லை. அணு ஆயுதச் சோதனையை நடத்தினோம்.
கடந்த, 2017ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சாஹிப் நிசார் அளித்த தீர்ப்பால், கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் நான் விலக நேரிட்டது. என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. இம்ரான் கான் மீதான வழக்குகள் அனைத்தும் உண்மையானவை. இல்லை என்று அவரால் மறுக்க முடியுமா.
தோல்வி
அந்த நேரத்தில், இம்ரான் கானை ஆட்சியில் அமர்த்துவதற்காக, ஐ.எஸ்.ஐ., எனப்படும் நம் உளவு அமைப்பின் தலைவராக இருந்த ஜெனரல் ஜாஹிருல் இஸ்லாம், 2014ல் என்னை தொடர்பு கொண்டார். பதவி விலகும்படி கூறினார். பதவி விலகாவிட்டால் புதிய உதாரணத்துக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்தார்.
ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன்தான், இம்ரான் கான் பிரதமரானார். இதை அவரால் மறுக்க முடியுமா.
நாம் அணு ஆயுத சோதனை செய்த பின், இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய் வந்தார். அப்போது, 1999 பிப்., 21ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை நாம் மீறிவிட்டோம். -ஜம்மு - காஷ்மீரின் கார்கிலில் ஊடுருவ முயன்றோம். அது நாம் செய்த மிகப் பெரும் தவறு. கார்கில் போரில் தோல்வி அடைந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.