பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்: புடினை சந்தித்த பின் பிரதமர் மோடி பேச்சு
பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்: புடினை சந்தித்த பின் பிரதமர் மோடி பேச்சு
ADDED : ஜூலை 09, 2024 05:04 PM

மாஸ்கோ: 'பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்' என ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய பின், பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மாஸ்கோவில் உள்ள க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு புடின் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: மகத்தான வரவேற்பு அளித்தமைக்கு அதிபர் புடினுக்கு நன்றி. 40 ஆண்டுகளாக இந்தியா பயங்கரவாதத்தை சந்தித்து வருகிறது. அதன் வலி என்னவென்பது தெரியும். பயங்கரவாதத்தை இந்தியா கண்டிக்கிறது. பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம். 22 ஆண்டுகளில் 22 சந்திப்புகள் நடந்துள்ளன. 10 ஆண்டுகளில் 17 முறை புடினை சந்தித்துள்ளேன். அடிக்கடி நடைபெறும் சந்திப்புகள் உறவின் ஆழத்தை பிரதிபலிக்கிறது.
உறவு
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள உறவு ஆழமானது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவடையும். பயங்கரவாதத்திற்கு எதிராக, ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு புடின் வாழ்த்தியதற்கு நன்றி. நல்ல நண்பர்களான நாம் இருவரும் நேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.
எரிபொருள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகம் பல சவால்களை எதிர்கொண்டது. அப்போதும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உறவு வலுவானதாக இருந்தது. பல நாடுகள் உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, எங்கள் விவசாயிகள் பிரச்னையை எதிர்கொள்ள நாங்கள் அனுமதிக்கவில்லை. ரஷ்யாவுடனான உறவுகள் அதில் பங்கு வகித்தன. ரஷ்யாவின் ஒத்துழைப்பால் இந்தியாவில் உள்ள சாதாரண குடிமக்களுக்கும் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.