ADDED : மே 07, 2024 06:23 AM

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஹரியானாவைச் சேர்ந்த 22 வயது மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், ஹரியானாவின் கர்னால் பகுதியைச் சேர்ந்த நவ்ஜீத் சந்து, 22, என்ற மாணவர், எம்.டெக்., படித்து வந்தார். மெல்போர்னில், நம் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், வாடகை அறையில் ஒன்றாக தங்கி உள்ளனர். இங்கு தங்கிய நவ்ஜீத் சந்துவின் நண்பருக்கும், மற்ற இந்திய மாணவர்களுக்கும் இடையே, வாடகை தொடர்பாக சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தன்னிடம் கார் இருப்பதாகவும், உடைமைகளை எடுத்துக் கொண்டு வரும்படியும், தன் நண்பரிடம் கூறி, நவ்ஜீத் சந்து புறப்பட்டுச் சென்றார். அறையில் நண்பரின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து வந்த அவர், சண்டை போட வேண்டாம் என, இரு தரப்பிடமும் கூறி உள்ளார். அப்போது நவ்ஜீத் சந்துவை ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தாக்குதலில், அவரது நண்பரும் காயமடைந்தார்.
நவ்ஜீத் சிங் சந்துவை தாக்கிய இந்திய மாணவர்கள், அபிஜீத் மற்றும் ராபின் கார்டன் என்பதும், அவர்களும் ஹரியானாவின் கர்னால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.