ஒண்ணா, ரெண்டா, 1000 சதுர கி.மீ., போச்சே; ரஷ்யாவுக்கு அதிர்ச்சி தந்த உக்ரைன் ராணுவம்!
ஒண்ணா, ரெண்டா, 1000 சதுர கி.மீ., போச்சே; ரஷ்யாவுக்கு அதிர்ச்சி தந்த உக்ரைன் ராணுவம்!
ADDED : ஆக 14, 2024 12:42 PM

கீவ்: கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது ரஷ்ய அதிபர் புடினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. நவீன ராணுவ தளவாடங்களோ, நிதி வசதியோ இல்லாத உக்ரைன் ராணுவத்தை போர் தொடங்கிய சில நாட்களிலேயே பின்னுக்குத் தள்ளி ரஷ்யா முன்னேறியது. உக்ரைன் நாட்டின் சில மாநிலங்களை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ளன. லட்சக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பை ரஷ்ய ராணுவத்திடம் இழந்த உக்ரைன், இப்போது தான் பதிலுக்கு வேலையை காட்டத் துவங்கியுள்ளது.
1000 சதுர கி.மீ.,
ரஷ்யா எதிர்பார்க்காத இடத்தில், திடீர் தாக்குதல் நடத்திய உக்ரைன் படைகள், குர்ஸ்க் மாநிலத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. ரஷ்ய மக்களின் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்தார்.
புடின் ஆவேசம்
ரஷ்யாவில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவது குறித்து, அதிபர் புடின் கூறியதாவது: மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இந்த தாக்குதலை உக்ரைன் அரங்கேற்றி உள்ளது. அப்பாவி ரஷ்ய பொதுமக்கள் மீதும், அணுமின் நிலையங்களின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல.
எதிரிகளை அடித்து துரத்தவும், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது.இவ்வாறு புடின் தெரிவித்தார். எனினும், ரஷ்யா நிலப்பரப்பில் உக்ரைன் படைகள் ஊடுருவி தாக்கியது, அதிபர் புடினுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.