ஸ்பெயின் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மீட்பு பணிகளுக்காக 10,000 பேர் விரைவு
ஸ்பெயின் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மீட்பு பணிகளுக்காக 10,000 பேர் விரைவு
ADDED : நவ 02, 2024 11:42 PM

மேட்ரிட்,: ஸ்பெயினின் வெலன்சியா பகுதியை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமான நிலையில், அவர்களை மீட்க பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10,000 பேர், கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வெலன்சியா மாகாணத்தில், சமீபத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பலர் மாயம்
இது, கரையோரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பிரதான சாலைகளை வெள்ளக்காடாக்கியது.
சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் மாயமாகி உள்ளனர்.
அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, ஆயிரக்கணக்கானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலா 5,000 போலீசார், ராணுவ வீரர்கள் என 10,000 பேர் கூடுதலாக மீட்புப் பணியில் ஈடுபடுவர் என, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நேற்று அறிவித்தார்.
தன்னார்வலர்கள்
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி களில் சாலைகளை ஆக்கிரமித்த சேற்றை அகற்றி, சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.