ADDED : மார் 30, 2025 03:52 AM
அபுஜா: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள எடோ மாகாணத்திற்கு, அந்நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் சமீபத்தில் சென்றனர்.
அம்மாகாணத்தின் உரோமி என்ற பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு வசிக்கும் மக்களில் சிலர், குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகம் அடைந்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
வாகன டயர்களை தீவைத்து எரித்து, சுற்றுலா பயணியர் மீது வீசியதில், 16 பேர் தீயில் கருகி பலியாகினர்.
இதற்கிடையே, சுற்றுலா பயணியரை தேடி உள்ளூர் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது ஆயுதங்களை காட்டி, அவர்களை அப்பகுதி மக்கள் மிரட்டினர்.
இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு, வீடு வீடாக சோதனை நடத்தினர். இதில், சுற்றுலா பயணியரை கொலை செய்த, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் பிடியில் இருந்த மேலும் 10 சுற்றுலா பயணியரை பத்திரமாக மீட்டனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.