போர்ச்சுகல் நாட்டில் கேபிள் ரயில் தடம் புரண்டு 17 பேர் பலி
போர்ச்சுகல் நாட்டில் கேபிள் ரயில் தடம் புரண்டு 17 பேர் பலி
ADDED : செப் 05, 2025 02:39 AM

லிஸ்பன்:போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன் நகரில், வரலாற்று சிறப்புமிக்க 'குளோரியா புனிகுலர் கேபிள் கார்' ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில், 17 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் தலைநகரில் உள்ள செங்குத்தான மலைப்பகுதியில், மக்களின் போக்குவரத்துக்காக டிராம் போன்ற 'புனிகுலர் கேபிள் கார்' ரயில் செயல்பாட்டில் உள்ளது. இது, அங்கு வரும் சுற்றுலா பயணியரிடையே பிரபலமானது.
இந்நிலையில், இந்த ரயில் நேற்று முன்தினம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர். இதை தவிர, 18 பேர் காயமடைந்து உள்ளதாக அந்நாட்டின் மருத்துவ சேவைத்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், செங்குத்தான மலையில் ஏறும்போது, ரயிலின் கேபிள் அறுந்ததில், கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பின்னோக்கி சென்று, அங்குள்ள கட்டடத்தின் மீது மோதி தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விபரங்கள் இதுவரை தெரியவில்லை.