அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து மொராக்கோவில் 19 பேர் பலி
அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து மொராக்கோவில் 19 பேர் பலி
ADDED : டிச 11, 2025 05:48 AM

ரபாத்: மொராக்கோ நாட்டில், தலா நான்கு மாடிகளைக் கொண்டு இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில், 19 பேர் பலியாகினர்; 16 பேர் படுகாயமடைந்தனர்.
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகவும், சுற்றுலா தலமாகவும் பெஸ் உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்த நகரத்தில் விரிசல்களை கொண்ட ஏராளமான பழைய கட்டடங்கள் உள்ளன.
இந்த நிலையில் பெஸ் நகரின் அல்-மசிரா என்ற பகுதியில், அடுத்தடுத்து இருந்த, தலா நான்கு மாடிகள் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் நேற்று முன்தினம் இரவு, திடீரென இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்; 16 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள், காவல் துறை, சிவில் பாதுகாப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை தொடங்கின. அருகில் உள்ள கட்டடங்களில் இருந்த குடும்பங்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டன.
பழமையான இந்த கட்டடங்களில், சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது இந்த ஆண்டின் மூன்றாவது கட்டட விபத்து சம்பவமாகும். கடந்த மே மாதத்தில் அல்-ஹஸ்ஸானி பகுதியில் ஒரு கட்டடம் இடிந்து 10 பேர் உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரியில் பெஸ் நகரில் ஒரு பழைய வீடு இடிந்து 5 பேர் இறந்தனர். பழமையான பெஸ் நகரத்தில் கட்டட விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படாததே விபத்துகளுக்கு காரணம் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

