அமெரிக்காவுக்கு வேலைதேடி சென்ற தெலுங்கானா பெண்கள் விபத்தில் பலி; காரில் சுற்றுலா சென்றபோது சோகம்
அமெரிக்காவுக்கு வேலைதேடி சென்ற தெலுங்கானா பெண்கள் விபத்தில் பலி; காரில் சுற்றுலா சென்றபோது சோகம்
ADDED : டிச 29, 2025 05:15 PM

கலிபோர்னியா: அமெரிக்காவில் தங்கி வேலைதேடிய தெலுங்கானா மாநில இரண்டு பெண்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு;
தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டம் கார்லாவைச் சேர்ந்தவர்கள் பாவனா, (24)மேகனா(24). இவர்கள் இருவரும் முதுகலை பட்டதாரிகள் ஆவர். இருவரில் பாவனா, சமீபத்தில் உயர்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கே அவர் வேலையும் தேடிக் கொண்டு இருந்தார். இதேபோல, மோகனாவும் அமெரிக்காவில் வேலை தேடி கொண்டு இருந்தார்.
நெருங்கிய தோழிகளாக மாறிய இருவரும், நண்பர்கள் 8 பேருடன் இரண்டு கார்களில் கலிபோர்னியாவுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். அவர்கள் பயணித்த கார், அலபாமா மலைப்பகுதி சாலையில் ஒரு வளைவில் திரும்பியபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பாவனா, மேகனா இருவருமே பலியாகினர். தகவல் அறிந்த அமெரிக்கா போலீசார், சம்பவ இடம் சென்று உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர். விபத்து குறித்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருவரின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளனர்.

