நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை: இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டார் லலித் மோடி
நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை: இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டார் லலித் மோடி
ADDED : டிச 29, 2025 04:46 PM

லண்டன்: சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில், அதில் நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அதற்காக இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்பதாக ஐ.பி.எல்., எனப்படும், 'இந்தியன் பிரீமியர் லீக்' முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.
விஜய் மல்லையா தன் 70வது பிறந்த நாளை சமீபத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடினார். அதில், விஜய் மல்லையாவும், லலித் மோடியும் ஒன்றாக பங்கேற்றனர். இதுதொடர்பாக லலித் மோடி, சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டார். அதில், இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய தப்பியோடியவர்கள் என அவர் கூறியது சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் கூறுகையில், “பொருளாதார குற்ற வழக்குகளில் தப்பியோடிய குற்றவாளிகளை நம் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதில், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதற்காக, பல நாடுகளின் அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம்,” என்றார்.
இதனையடுத்து லலித் மோடி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:நான் யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால், குறிப்பாக இந்திய அரசின் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அந்த அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அது அவ்வாறு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்படவில்லை. மீண்டும் ஒரு முறை எனது ஆழ்ந்த மன்னிப்புகள் எனக்கூறியுள்ளார்.

