ஹமாஸ் பிடியில் 738 நாட்கள் இருந்த 20 பிணை கைதிகள் விடுவிப்பு
ஹமாஸ் பிடியில் 738 நாட்கள் இருந்த 20 பிணை கைதிகள் விடுவிப்பு
ADDED : அக் 14, 2025 06:09 AM

ஜெருசலேம்; காசாவில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில், 738 நாட்களாக இருந்த 20 பிணைக் கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆனந்த கண்ணீருடனும், கூச்சலுடனும் இஸ்ரேல் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது.
உலக நாடுகளின் அழுத்தத்தையடுத்தும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 20 அம்ச அமைதி திட்ட முன்மொழிவையடுத்தும், இருதரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
அமைதி திட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என, ஹமாஸ் தெரிவித்திருந்தது. இருப்பினும், பிணைக் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில அம்சங்களை இரு தரப்பும் ஏற்றன.
இதன்படி போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் முன் வந்தன. அமைதி திட்டத்தின் முதல்கட்டத்தின் அடிப்படையில், 192 கைதிகளை நேற்று முன்தினம் இஸ்ரேல் விடுவித்தது.
இதைத்தொடர்ந்து, ஹமாஸ் தன்னிடம் உயிருடன் இருந்த 20 பிணைக் கைதிகளை நேற்று விடுதலை செய்தது. மேலும், 28 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது.
காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் பிணைக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதியாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர்.