போரை நிறுத்த 20 அம்ச திட்டம்: இஸ்ரேல் ஏற்றது; ஹமாஸ் மவுனம்; 3 நாள் கெடு விதித்தார் அமெரிக்க அதிபர்
போரை நிறுத்த 20 அம்ச திட்டம்: இஸ்ரேல் ஏற்றது; ஹமாஸ் மவுனம்; 3 நாள் கெடு விதித்தார் அமெரிக்க அதிபர்
UPDATED : அக் 01, 2025 08:45 AM
ADDED : அக் 01, 2025 07:48 AM

வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் மவுனம் காக்கிறது. இதையடுத்து அந்த அமைப்புக்கு மூன்று நாள் கெடு விதித்துள்ளார் டிரம்ப்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்த, 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் துவங்கிய போர், இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது.
இந்தப் போரில் காசா தரப்பில், 66,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிப் பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் கூறியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இம்மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகை யில் 20 அம்ச அமைதித் திட் டத்தை முன் மொழிந்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில், நேற்று முன்தினம் இரவு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது அமைதி திட்டம் குறித்து நெதன்யாகுவிற்கு, டிரம்ப் எடுத்து கூறினார். அதை நெதன்யாகு ஏற்றுக் கொண்டுள்ளதாக, டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஹமாஸ் ஒப்புக்கொண்டால் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், இல்லையென்றால் இஸ்ரேல் ராணுவ நடிவடிக்கை வாயிலாக ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்க, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முயற்சியை ஏற்பதாக, அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து பதிலளிப்பதாக, ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மூன்று நாட்களுக்குள் திட்டத்தை ஏற்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என, ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.