பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ஆதரவு
பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ஆதரவு
ADDED : டிச 19, 2024 04:25 PM

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, அவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, பாக்., வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா, 62, அமெரிக்காவில், 2009-ல் பிடிபட்டான். இவன், பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, கடந்த மே மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவன் சார்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றத்தில், பயங்கரவாதி தஹாவூர் ராணா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தை காரணம் காட்டி, இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து கடைசி சட்ட முயற்சியாக, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அமெரிக்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறினார்.