கல்வான் மோதல் போன்ற சம்பவத்தை தவிர்க்க வேண்டும்: சீனாவிடம் ராஜ்நாத் வலியுறுத்தல்
கல்வான் மோதல் போன்ற சம்பவத்தை தவிர்க்க வேண்டும்: சீனாவிடம் ராஜ்நாத் வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2024 09:37 PM

வியான்டைன்: லடாக்கின் கல்வானில் ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தவிர்க்க வேண்டும் என சீனாவிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா சீனா இடையே, நான்காண்டுகளாக நீடித்து வந்த ராணுவ பதட்டம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜன்- ஐ சந்தித்து பேசினார். எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், இச்சந்திப்பு முதல்முறையாக நடந்தது. அப்போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது: வருங்காலங்களில் கல்வானில் ஏற்பட்ட மோதலை போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மோதலுக்கு பதில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். 2020 மோதலில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களை பற்றி சிந்திக்கவும், இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கவும், எல்லையில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

