காப்பாற்றியது ரஷ்ய படை: பதவி இழந்த சிரியா அதிபர் தகவல்!
காப்பாற்றியது ரஷ்ய படை: பதவி இழந்த சிரியா அதிபர் தகவல்!
ADDED : டிச 17, 2024 07:39 AM

டமாஸ்கஸ்: சிரியாவில் இருந்து வெளியேறும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் தங்கள் படைத்தளம் தாக்குதலுக்கு ஆளானதை தொடர்ந்து ரஷ்ய படையினர் என்னை காப்பாற்றி தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து விட்டனர் என ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள மாஜி சிரியா அதிபர் அல் ஆசாத் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த பஷார் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இவருக்கும், பல கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே, கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. அபு முகமது அல் கோலானி தலைமையிலான ஹயாத் தாஹ்ரிர் அல் ஷாம் என்ற கிளர்ச்சி படை, சமீபத்தில், தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியது.
இதையடுத்து நாட்டை விட்டு தனி விமானத்தில் தப்பிய பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சிரியாவை விட்ட தப்பியோடிய பின் முதல் அறிக்கை ஒன்றை ஆசாத் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை; நாடு பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கியது. சிரியா அதிபர் பதவியை ராஜினாமா செய்யவோ, தப்பியோடவோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. டிசம்பர் 8ம் தேதி அதிகாலை வரை டமாஸ்கஸில் இருந்து எனது கடமையை செய்தேன்.
நிலைமை மோசமானதை தொடர்ந்து நான் ரஷ்ய படைத்தளம் அமைந்திருக்கும் லடாக்கியா பகுதிக்கு சென்று விட்டேன். அங்கிருந்து கொண்டு தொடர்ந்து போர் நடத்துவதே எனது திட்டமாக இருந்தது. ஆனால் அந்த இடமும் தாக்குதலுக்கு ஆளானதை தொடர்ந்து ரஷ்ய படையினர், என்னை அவசர அவசரமாக தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டனர்.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக நான் ஒருபோதும் பதவியை விரும்பவில்லை. சிரியா மக்களின் நம்பிக்கையால் ஆதரிக்கப்படும் பாதுகாவலராக நான் கருதுகிறேன். சிரியா மீண்டும் சுதந்திரமாக செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.