டாலருக்கு போட்டியாக புது கரன்சியா: ஜெய்சங்கர் மறுப்பு
டாலருக்கு போட்டியாக புது கரன்சியா: ஜெய்சங்கர் மறுப்பு
ADDED : டிச 07, 2024 10:35 PM

தோஹா: '' டாலருக்கு போட்டியாக ' பிரிக்ஸ் ' அமைப்புக்கு என புது கரன்சி துவக்கும் எண்ணம் இல்லை '', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கியது பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பில், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமீரேட்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைக்கு டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிரிக்ஸ் அமைப்புக்கு என தனியாக பொதுவான கரன்சி உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது. இதில் உள்ள சாதக பாதகங்களை இந்தியா முன்வைத்தது. பரிவர்த்தனைக்கான கரன்சியை மாற்றும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ' டாலரை பொது கரன்சியாக பயன்படுத்துவதில் இருந்து விலக பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இதை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்துவிட்டது. டாலரை மாற்ற மாட்டோம். பொதுவான கரன்சியை உருவாக்க மாட்டோம் என உறுதிமொழியை பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் அளிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் 100 சதவீத வரியை அவர்கள் சந்திக்க நேரிடும்' எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக கத்தாரின் தோஹா நகரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: டிரம்ப்பின் முதல் ஆட்சி நிர்வாகத்துடன் இந்தியா நல்லுறவை கொண்டு இருந்தது. வர்த்தகம் தொடர்பான சில பிரச்னைகள் மட்டுமே இருந்தன. பிரதமர் மோடி , டிரம்ப் இடையே தனிப்பட்ட உறவு உள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் கருத்து முக்கியம் என்ற போதிலும், டாலரின் மதிப்பு இழப்பை செய்யவில்லை எனக்கூறியுள்ளோம். பிரிக்ஸ் அமைப்புக்கு என தனி கரன்சி என்ற திட்டம் இல்லை. நிதிப் பரிமாற்றம் தொடர்பாக பிரிக்ஸ் ஆலோசிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது. டாலரை பலவீனப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.