UPDATED : அக் 09, 2024 04:27 AM
ADDED : அக் 09, 2024 02:15 AM

காத்மாண்டு: நேபாளத்தில், தவுலகிரி மலையில் ஏறிய ரஷ்யாவைச் சேர்ந்த ஐந்து மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் தவுலகிரி மலை உள்ளது. உலகின் ஏழாவது உயரமான மலையாகிய இது, 26,788 அடி உயரமுடையது.
ரஷ்யாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள், கயிறு வாயிலாக தவுலகிரி மலையின் உச்சிக்கு சமீபத்தில் செல்ல முயன்றனர். சில மணி நேரங்களுக்கு பின், மலையடிவார முகாம் உடனான தொடர்பை அவர்கள் இழந்தனர். இதையடுத்து, அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில், தவுலகிரி மலையின், 25,262 அடி உயரத்தில், ரஷ்ய மலையேற்ற வீரர்கள் ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும், மற்றொரு ரஷ்ய வீரர் ஹெலிகாப்டர் வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, வடக்கு நேபாளத்தில் அமைந்துள்ள ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களின் எல்லையான சூர்யகுண்டா பகுதியைச் சுற்றி, நேற்று முன்தினம் இரவு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போலந்து நாட்டின் சுற்றுலாப் பயணி சோவின்ஸ்கா அக்னிஸ்கா, 23, உயிரிழந்தார்.