ADDED : ஜன 05, 2025 05:48 AM

நைரோபி: கென்யாவில் ராட்சத வட்ட வடிவிலான 500 கிலோ எடையிலான உலோகம், வானில் இருந்து விழுந்தது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது விண்வெளி குப்பை என அந்நாட்டு விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் முக்குகு என்ற பகுதியில் சமீபத்தில், வான்பரப்பில் இருந்து ராட்சத வட்ட வடிவிலான உலோகம் விழுந்தது.
இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். உடனே, தகவலறிந்து வந்த அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ராட்சத உலோகத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
விண்வெளி
அந்த உலோகம், 8 அடி விட்டம், 500 கிலோ எடையில் இருந்தது; அது, ராக்கெட்டிலிருந்து பிரிந்த ஒரு பகுதி என்றும், விண்வெளியில் சுழன்று கொண்டிருந்த அந்த குப்பை பூமியில் விழுந்ததாகவும், கென்ய விண்வெளி மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'பூமியில் இருந்து அனுப்பப்படும் ராக்கெட்டின் நிலைகளை இணைக்க பிரிப்பு வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
'விண்வெளிக்கு ராக்கெட் செலுத்தியபின் குறிப்பிட்ட தொலைவுக்கு பின், அது தானாக எரிந்து அழிந்து விடும் அல்லது ஆழ்கடலில் அதன் எச்சங்கள் விழுவது போல் வடிவமைக்கப்படும். ஆனால், ஒரு சில வளையங்கள் மட்டும் மக்கள் வசிக்கும் பகுதியில் விழும் நிலை ஏற்படுகிறது.
நடவடிக்கை
'வானில் இருந்து அதீத வேகத்தில் வந்ததால் சிவப்பு நிறத்தில், மிகவும் வெப்பம் நிறைந்ததாக காணப்பட்டது. அதன் வெப்பம் குறைந்ததும், உரிய நிறத்தில் காட்சியளித்தது. இதுபோன்ற விண்வெளி குப்பை நிலப்பகுதியில் பலமுறை விழுந்துள்ளன.
'இதனால், மக்கள் அச்சப்பட தேவையில்லை. இதற்கு காரணமான நிறுவனத்தை கண்டறிந்த பின், சர்வதேச சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

