காஷ்மீரில் மேகவெடிப்பில் 60 பேர் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமர் இரங்கல்
காஷ்மீரில் மேகவெடிப்பில் 60 பேர் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமர் இரங்கல்
ADDED : ஆக 16, 2025 07:43 PM

டோக்கியோ: காஷ்மீரில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக 60 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜப்பான் பிரதமர் சிகெரு இசிபா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், நேற்று முன்தினம் மதியம் திடீர் மேகவெடிப்பால் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய கனமழையால், சிசோட்டியை ஒட்டிய மலைப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்த கடைகள், வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. சேறும், சகதியுமாய் பெருக்கெடுத்த நீரில், வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 160க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 38 பேரின் உடல்நிலை மோசமாக இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கு இரங்கல் தெரிவித்து ஜப்பான் பிரதமர் சிகெரு இசிபா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவின் வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விலை மதிக்க முடியாத பல உயிர்கள் இழந்தது குறித்து அறிந்ததும் கவலை அடைந்தேன். ஜப்பான் அரசு சார்பில், இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்துக்கு இரங்கலையும் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்தப் பதிவில் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.