ஹோட்டலில் பயங்கர தீ விபத்து துருக்கியில் 66 பேர் உயிரிழப்பு
ஹோட்டலில் பயங்கர தீ விபத்து துருக்கியில் 66 பேர் உயிரிழப்பு
ADDED : ஜன 22, 2025 02:22 AM

அங்காரா, துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 66 பேர் பலியாகினர்; 51 பேர் காயம் அடைந்தனர்.
மேற்காசிய நாடான துருக்கியின் பொலு மாகாணத்தில் அமைந்துள்ள கர்தல்கயா ரிசார்ட் பகுதியில் கிரான்ட் கர்த்தால் என்ற பெயரில் 12 மாடி ஹோட்டல் உள்ளது.
இங்கு, 238 பேர் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவில் ஹோட்டலின் கூரை மற்றும் 12 வது மாடியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது மற்ற தளங்களுக்கும் பரவியது.
இதனால், அறைகளில் தங்கியிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அறையில் தங்கியிருந்த மூவர் தீயில் சிக்காமல் இருக்க மாடியில் இருந்து கீழே குதித்தபோது உயிரிழந்தனர்.
மேலும் சிலர் அட்டைகள் மற்றும் போர்வைகளை பயன்படுத்தி கீழே குதித்தும் தப்பினர். இவ்வாறு மொத்தம் 66 பேர் தீயில் சிக்கி பலியாகினர்; 51 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து 32 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
காயம் அடைந்தவர்கள் 28 ஆம்புலன்ஸ்களில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.