கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு 66 பேர் பலி; 44 பேர் மாயம்
கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு 66 பேர் பலி; 44 பேர் மாயம்
ADDED : செப் 29, 2024 12:09 AM

காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி, 66 பேர் பலியாகியுள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த 26ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காத்மாண்டுவில் மட்டும் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டு வழியாக செல்லும் கவுரா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி, நாடு முழுதும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், காத்மாண்டு சமவெளி பகுதியில் மட்டும், 34 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி, 36 பேர் காயம் அடைந்துள்ளனர். இது தவிர, 44 பேர் மாயமாகியுள்ளனர். 3,000க்கும் அதிகமான பேரிடர் மீட்புப்படையினர், படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் சென்று, வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை, 1,000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுதும் 44 நெடுஞ்சாலைகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.