டென்மார்க்குடன் ஒற்றுமையாக இருக்கிறோம்;8 ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை
டென்மார்க்குடன் ஒற்றுமையாக இருக்கிறோம்;8 ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை
ADDED : ஜன 18, 2026 10:37 PM

பெர்லின்: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ஐரோப்பிய நாடுகள் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு நாடான கிரீன்லாந்து, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒருபகுதியாக இருந்து வருகிறது. இருப்பினும், அது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. கிரீன்லாந்தை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நாடுகளை அச்சுறுத்தும் விதமாக, கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தன்னுடைய முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது அதிக வரிகளை விதிப்பேன் என்று அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
இதையடுத்து, கிரீன்லாந்துக்கு ஐரோப்பிய நாடுகள் கூடுதல் படைகளையும் அனுப்பியது. மேலும், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தையும் நிறுத்தின.இந்த நிலையில், கிரீன்லாந்து விவகாரத்தில் அதிபர் டிரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு, 8 ஐரோப்பிய நாடுகள் நேரடி எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் முழு ஒற்றுமையாக இருப்பதாக அறிவித்துள்ளன.
டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்; கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. டென்மார்க்குடன் இணைந்து தற்போது நடைபெற்று வரும் ராணுவப் பயிற்சி என்பது, ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

