ஓராண்டில் 85,000 விசாக்கள் ரத்து; அமெரிக்க அரசு கடும் கெடுபிடி
ஓராண்டில் 85,000 விசாக்கள் ரத்து; அமெரிக்க அரசு கடும் கெடுபிடி
ADDED : டிச 11, 2025 05:41 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 85,000 பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து கடுமையான குடியேற்றக் கொள்கைகளை வகுத்து வருகிறார். வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் எச்1பி விசா, மாணவர் விசா என அனைத்திற்கும் பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரத்து செய்யப்பட்ட விசாக்களில் 8,000-க்கும் மேற்பட்டவை மாணவர்களுக்கான விசாக்கள் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கும் மேற்பட்டவை, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், தாக்குதல், திருட்டு போன்ற குற்றச் செயல்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பயங்கரவாத ஆதரவு, விசா காலாவதி, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற காரணங்களுக்காகவும் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நாட்டில் ஐந்து கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினர் தங்கியிருக்கின்றனர். அவர்களின் விசாக்களை சரிபார்க்கும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விரிவுப்படுத்தியுள்ளது.
'மேலும் தனிநபரை கண்காணிக்கும் செயலிலும் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்க சமூகங்களின பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதி' என்று குறிப்பிட்டார்.

