தாய்லாந்து - கம்போடியா மோதலால் 3 நாளில் 5 லட்சம் பேர் வெளியேற்றம்
தாய்லாந்து - கம்போடியா மோதலால் 3 நாளில் 5 லட்சம் பேர் வெளியேற்றம்
ADDED : டிச 11, 2025 05:38 AM

பாங்காக்: தாய்லாந்து- மற்றும் கம்போடியா இடையேயான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து, மூன்று நாட்களில் 5 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.
கடந்த ஜூலையில், இரு நாடுகளிடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மற்றும் மலேஷியா தலையிட்டதால், கடந்த அக்டோபரில் இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் கடந்த 8ம் தேதி கம்போடியா வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கம்போடிய ராணுவ இலக்குகளை குறி வைத்து தாய்லாந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இருநாட்டு எல்லையில் நான்காவது நாளாக நேற்றும் பதற்றம் நீடித்தது.
தாக்குதலில் தாய்லாந்தின் ஆறு மாகாணங்களும், கம்போடியாவின் ஐந்து மாகாணங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாட்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவில், கடந்த மூன்று நாட்களில் மட்டும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சண்டையை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு தற்போது இல்லை என்று இருநாடுகளும் கூறியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

