அதுவா... அதாவது... அதுதாங்க அது!...: இண்டியா கூட்டணிக்கு ராகுல் தந்த விளக்கம்
அதுவா... அதாவது... அதுதாங்க அது!...: இண்டியா கூட்டணிக்கு ராகுல் தந்த விளக்கம்
ADDED : செப் 11, 2024 11:06 AM

வாஷிங்டன்: 'இண்டியா' கூட்டணியா 'இண்டி' கூட்டணியா என்ற குழப்பம் குறித்து அமெரிக்காவில் நிருபர் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல், தட்டுத்தடுமாறி அளித்த விளக்கம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து 'இண்டியா' (ஆங்கிலத்தில் I.N.D.I.A) என்ற கூட்டணியை உருவாக்கின. இதன் விரிவாக்கம்: I - Indian, N - National, D - Developmental, I - Inclusive, A - Alliance. அதாவது, இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி. இந்த கூட்டணி கணிசமான இடங்களை பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த முடியவில்லை. தொடர்ந்து 3வது முறையாக தே.ஜ., கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது.
தேர்தல் பிரசாரத்தின்போது 'இண்டி' கூட்டணி என்றே பா.ஜ., கட்சியினர் கூறிவந்தனர். அதாவது, INDIA என்ற பெயரில் உள்ள 'ஏ' எழுத்து தான் கூட்டணி என்ற சொல்லை குறிக்கிறது என்பதால் அதனை 'இண்டியா' கூட்டணி எனச்சொல்வது தவறு என்பது அவர்களின் வாதம்; அதுதான் உண்மையும் கூட.
ஆனால், எதிர்க்கட்சியினர் இது 'இண்டியா' கூட்டணி தான் என முட்டுக்கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், வாஷிங்டனில் நேஷனல் பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றார். இந்திய வம்சாவளியினர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். ராகுலிடம் நிருபர் ஒருவர், 'உங்கள் இண்டி கூட்டணியில் பல கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை. எப்படி ஆட்சி அமைத்து நாட்டை நிர்வகிப்பீர்கள்?' எனக் கேட்டார்.
அது... அது வந்து...
இதற்கு, ''அது இண்டி கூட்டணி இல்லை; இண்டியா கூட்டணி. பா.ஜ., சொல்வது தான் இண்டி கூட்டணி'' என ராகுல் பதிலளித்தார். அப்போதும் நிறுத்தாத நிருபர், ''அப்படியென்றால் கூட்டணி பெயரில் உள்ள 'ஏ' எழுத்து என்ன பொருள் தருகிறது?'' என மறு கேள்வி கேட்டார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராகுல், ''அது... அது வந்து... ஏ என்பது அலையன்ஸ் (கூட்டணி)'' என சமாளித்தார். ''அப்புறம் எப்படி இண்டியா கூட்டணி என்பீர்கள்?'' என விடாமல் கேள்விகளால் விரட்டினார் நிருபர்.
இதுதான் எங்கள் ஐடியா
இதனை கவனித்த நேர்காணல் நடத்திய நபர், புன்சிரிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பதிலளித்த ராகுல், ''அது அப்படியில்லை. எங்கள் கூட்டணியின் முழு ஐடியாவும், இந்தியா தாக்கப்படுகிறது என்பதை இந்திய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான். அந்த ஐடியா வெற்றிகரமாகவும் அமைந்தது. பா.ஜ.,வினர் பொதுவாக இண்டி கூட்டணி என்றே கூறுகின்றனர். ஆனால் இந்தியா முழுவதும் எங்களை இண்டியா கூட்டணி என்றே சொல்கின்றனர்'' என்றார்.
இண்டியா கூட்டணி என ராகுல் அளித்த இந்த விளக்கம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.