கட்டுமானத்தின் போது மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்
கட்டுமானத்தின் போது மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்
ADDED : செப் 27, 2024 10:55 PM

வாஷிங்டன் :அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்துக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் தென் சீனக் கடல் பகுதி முழுதையும், சீனா உரிமை கோரி வருகிறது. இதற்காக புருனே, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
எதிரிகளை சமாளிக்கும் விதமாக, சீனா தன் கடற்படையை அசுரவேகத்தில் கட்டமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வூஹான் நகரில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை அந்நாடு வடிவமைத்து வந்தது.
இந்த கப்பல், கட்டுமானத்தின்போதே நீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை 15ம் தேதி எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தில், சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. நீரில் மூழ்கிய அந்த கப்பல், கிரேன் உதவியுடன் துாக்கி நிறுத்தப்படுவது அந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.
கப்பல் நீரில் மூழ்கிய சமயத்தில் அணுசக்தி எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததா என்ற விபரம் தெரியவில்லை. கடந்த 25ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அந்த இடத்தில் வேறொரு நீர்மூழ்கி கப்பல் உள்ளது. அவையிரண்டும் ஒன்றா என்பது தெளிவாக தெரியவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.