சிங்கப்பூரில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு
சிங்கப்பூரில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு
ADDED : மே 20, 2025 07:13 AM

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டில் உள்ள, 60க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் ஒன்றிணைந்து, நேற்று முன்தினம் நாள் முழுதும், சிங்கப்பூர் வளர்ச்சிக்கு உதவும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு படைத்து மகிழ்ந்தன.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில், 'லிட்டில் இந்தியா' எனப்படும் இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த நிகழ்வில், ஏராளமான உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.
'எங்கள் வீடுகளை கட்டவும், உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தவும், இந்த நகரை அமைதியாக பராமரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து உழைக்கும் தொழிலாளர்களின் மதிப்பு, விலை மதிப்பில்லாதது. அத்தகையவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த நிகழ்வு நாள் முழுக்க நடத்தப்பட்டது' என, சிங்கப்பூரின் மனிதசக்தி அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.
தங்கள் சொந்த நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த இந்தியா மற்றும் வங்கதேச தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், 60,000 உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன.
சைவ, அசைவ உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, இந்திய தொழிலாளர்கள் வசிப்பிடங்களில் இலவசமாக வழங்கப்பட்டன.