தென்கொரியாவில் அதிபரை தொடர்ந்து செயல் அதிபர் ஹான் டக்- சூ பதவி நீக்கம்
தென்கொரியாவில் அதிபரை தொடர்ந்து செயல் அதிபர் ஹான் டக்- சூ பதவி நீக்கம்
ADDED : டிச 29, 2024 02:58 AM

சியோல்: தென்கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல் பார்லிமென்டால் பதவிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, செயல் அதிபர் ஹான் டக்- சூவும் நேற்று பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், ஆளும் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் இயோல், 64, அதிபராக இருந்தார். இவர், கடந்த 3ம் தேதி ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார்.
ராணுவ சட்டம்
அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராணுவ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ராணுவ சட்டத்தை திரும்ப பெறுவதாக யூன் சுக் இயோல் அறிவித்தார்.
யூன் சுக் இயோலை அதிபர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, கடந்த 14ல், இரண்டாவது முறையாக, பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் தாக்கல் செய்தன. மொத்தம், 300 எம்.பி.,க்கள் உடைய பார்லி.,யில், அதிபரை பதவிநீக்கம் செய்ய, 200 பேரின் ஆதரவு தேவை.
204 பேர் ஓட்டு
எதிர்க்கட்சிகளின் பலம், 192 ஆக உள்ள நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவாக, 204 பேர் ஓட்டளித்தனர். ஆளுங்கட்சியின் சில எம்.பி.,க்களும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்ததால், யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தென்கொரிய சட்டப்படி, அதிபரின் பதவி நீக்கத்தை, 180 நாட்களுக்குள் அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். யூன் சுக் இயோல் பதவி நீக்கத்தை தொடர்ந்து, பிரதமராக இருந்த ஹான் டக் சூ செயல் அதிபராக பதவியேற்றார்.
தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம், ஒன்பது பேர் அடங்கிய அமர்வாகும். குறைந்தபட்சம் ஆறு நீதிபதிகள், யூன் சுக் இயோலின் பதவிநீக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
அமர்வில் தற்போது ஆறு நீதிபதிகள் உள்ள நிலையில், ஒருவர் நிராகரித்தாலும், யூன் சுக் இயோல் மீண்டும் அதிபராகி விடுவார்.
யூன் சுக் இயோலின் பதவி நீக்கத்தை உறுதிப்படுத்த அரசியலமைப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும்படி, செயல் அதிபர் ஹான் டக் சூவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தின. இதை அவர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
200 பேரின் ஆதரவு
இதனால், அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், செயல் அதிபர் ஹான் டக் சூவுக்கு எதிராக நேற்று முன்தினம் பதவி நீக்க தீர்மானத்தை பார்லி.,யில் தாக்கல் செய்தன.
யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்ய, 200 பேரின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், ஹான் டக் சூவை பதவி நீக்கம் செய்ய, 151 பேரின் ஆதரவு மட்டும் போதும் என, சபாநாயகர் வூ வோன் ஷிக் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பலம், 192 ஆக உள்ள நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற ஆளுங்கட்சியின் ஆதரவு தேவையில்லை என்பதால், எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி அடைந்தன.
சபாநாயகரின் அறிவிப்பை எதிர்பாராத ஆளுங்கட்சி எம்.பி.,க்கள், பார்லி.,யில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, செயல் அதிபர் ஹான் டக் சூவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது, 192 எம்.பி.,க்கள் ஓட்டளித்ததை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
செயல் அதிபர் பதவியில் இருந்து கடமையாற்ற ஹான் டக் சூவுக்கு தடை விதிக்கப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. ஹான் டக் சூவுக்கு பதிலாக, நிதியமைச்சர் சோய் சாங்- மோக், செயல் அதிபராக பொறுப்பேற்றார்.
யூன் சுக் இயோலை போலவே, ஹான் டக் சூ பதவி நீக்கத்தையும் அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.