UPDATED : டிச 07, 2024 10:52 PM
ADDED : டிச 07, 2024 03:54 PM

அடிலெய்டு: ஆஸ்திரேலிய பவுலர்கள் வேகத்தில் மிரட்ட, இந்திய அணி 2வது இன்னிங்சில் தடுமாறுகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 86/1 ரன் எடுத்திருந்தது. மெக்ஸ்வீனி (38), லபுசேன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பும்ரா பந்தில் மெக்ஸ்வீனி (39), ஸ்டீவ் ஸ்மித் (2) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய லபுசேன் (64) அரைசதம் கடந்தார். மிட்சல் மார்ஷ் (9), அலெக்ஸ் கேரி (15), கேப்டன் கம்மின்ஸ் (12) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் (140) சதம் கடந்தார். சிராஜ் பந்தில் ஸ்டார்க் (18), போலந்து (0) அவுட்டாகினர்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (7) ஏமாற்றினார். ஸ்காட் போலந்து 'வேகத்தில்' யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (24), விராத் கோலி (11) வெளியேறினர். ஸ்டார்க் பந்தில் சுப்மன் கில் (28) போல்டானார். மறுமுனையில் அசத்திய கம்மின்ஸ் பந்தில் கேப்டன் ரோகித் சர்மா (6) 'பெவிலியன்' திரும்பினார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்து, 29 ரன் பின்தங்கி இருந்தது. ரிஷாப் பன்ட் (28), நிதிஷ் குமார் ரெட்டி (15) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலந்து தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.