பாகிஸ்தானில் உள்ள ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு
பாகிஸ்தானில் உள்ள ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு
ADDED : அக் 19, 2025 12:41 AM

இஸ்லாமாபாத்: ''இந்தியாவின் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் செயல்படுவதால், பாகிஸ்தானி ல் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்,'' என, பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கடுகடுத்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், சமீபகாலமாக இந்தியாவை தொடர்ந்து சீண்டி வருகிறது. இதற்கு காரணம், சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அமெரிக்கா சென்றிருந்த போது, அமெரிக்க அதிபர் டிரம்பால் பாராட்டப்பட்டனர்.
எரிச்சல் இதைத் தொடர்ந்து, சவுதியுடன் ஏற்பட்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில், பாகிஸ்தான் மற்றும் சவுதிக்கு எதிராக செயல்படும் எந்தவொரு நாடும் இரு நாடுகளுக்-கும் எதிரி என்று ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சம் ஆகியவையே, பாகிஸ்தானின் அகம்பாவத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தகி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன், முக்கிய இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இது பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்திஉள்ளது.
எல்லை பதற்றங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் பாகிஸ்தானில் தலைதுாக்கியுள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த இயலாத கையாலாகாதனத்தை, தங்கள் நாட்டில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது எரிச்சலாக கொட்டித் தீர்த்துள்ளார், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்.
இந்திய பினாமி இதுகுறித்து அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் வசிக்கும் அனைத்து ஆப்கானியர்களும் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும். காபூலில் உள்ள தலிபான் அரசு இந்தியா மற்றும் தடைசெய்யப்பட்ட டி.டி.பி., எனும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் அமைப்புடன் இணைந்து, பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்கிறது.
அண்டை நாடு என்கிற வகையில் இருந்த பழைய உறவுகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. பாகிஸ்தானின் நிலங்களும், வளங்களும், 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கே சொந்தமானது, ஆப்கானிஸ்தானியர்களுக்கு அல்ல.
காபூலில் ஆப்கானியர்களுக்கு என சொந்த அரசு உள்ளது. சுயமரியாதை கொண்ட நாடுகள் அன்னிய நிலத்திலும், வளத்திலும் தங்கள் மக்களை வாழ அனுப்பாது. பல ஆண்டுகளாக பொறுமை காக்கப்பட்டுவிட்டது.
ஆனால், ஆப்கனில் இருந்து நேர்மையான பதில்கள் கிடைக்கவில்லை. மாறாக, பாகிஸ்தான் மீது எல்லை தாண்டிய பயங்கரவாதம் சம்பவங்களே துாண்டிவிடப்படுகின்றன. பயங்கரவாதத்தின் ஆதாரம் எங்கிருந்தாலும், அதற்குரிய பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
தற்போது, தலிபான் அரசாங்கம் இந்தியாவின் பிரதிநிதியாக, ஒரு பினாமியாக செயல்பட்டு வருகிறது-. இந்தியாவின் மடியில் அமர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான சதியில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.