எரிபொருள் தரமாக இருந்தால் காற்று மாசு தானே குறையும்; இந்தோனேசியா சொல்வது இதைத்தான்!
எரிபொருள் தரமாக இருந்தால் காற்று மாசு தானே குறையும்; இந்தோனேசியா சொல்வது இதைத்தான்!
ADDED : செப் 13, 2024 11:33 AM

ஜகார்த்தா: காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்துடன், வாகன எரிபொருட்களின் தரத்தை மேம்படுத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது.
இந்தோனேசியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 90 ஆக்டேன் தரம் கொண்ட பெட்ரோல் மற்றும் பயோடீசல் ஆகியவற்றுக்கு அரசு மானியம் அளிக்கிறது. இவற்றில் காற்றை மாசுபடுத்தும் கந்தகம் அதிகப்படியாக இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன், விற்பனைக்கு வரும் வாகன எரிபொருளில் கந்தகத்தின் பங்கை குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இத்தகைய எரிபொருட்களின் விற்பனையை குறைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கு வழங்கப்படும் மானியத்தின் ஒரு பகுதி, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் தயாரிப்புக்கு வழங்கப்படும் என்று துணை போக்குவரத்து அமைச்சர் ரச்மத் கைமுதீன் தெரிவித்தார்.
எரிபொருள் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில், ஒவ்வொரு வாகனத்துக்கும் க்யூஆர் கோடு வழங்கும் முறையும் அமல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பொதுப்போக்குவரத்து, இரு சக்கர வாகனங்கள், டாக்சி போன்றவற்றுக்கு மட்டும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

