சும்மா இருந்த எனக்கு சம்பளம் ரூ.3 கோடி: அமேசான் ஊழியரின் பதிவு வைரல்
சும்மா இருந்த எனக்கு சம்பளம் ரூ.3 கோடி: அமேசான் ஊழியரின் பதிவு வைரல்
ADDED : ஆக 26, 2024 04:52 PM

வாஷிங்டன்: அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியில் இருப்பதாகவும், எந்தவித வேலையும் செய்யாமல் சும்மாவே இருப்பதாகவும், ஆனால் ஆண்டுக்கு ரூ.3.10 கோடி சம்பளம் பெறுவதாகவும் கூறியுள்ள பதிவு வைரலாகியுள்ளது.
எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கான ஊதியம் கிடைக்கவில்லை என பலரும் புலம்பி வருகின்றனர். சம்பள உயர்வு கிடைக்காதா என ஏங்கியுள்ளனர். ஆனால், இங்கு ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்ததற்காக ஆண்டுக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். வேறு எங்கும் இல்லை அமேசான் நிறுவனத்தில்தான்.
ஊழியர்கள் பலரும் தங்கள் பணி சம்பந்தமான கருத்துகளை 'பிளைண்ட்' தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மூத்த ஊழியர் ஒருவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது பதிவு: கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பை மேற்கொண்டபோது என்னுடைய வேலை பறிபோனது. இதையடுத்து அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தேன். கடந்த 1.5 ஆண்டுகளாக, முதுநிலை தொழில்நுட்ப திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ஊதியம் ஆண்டுக்கு ரூ.3.10 கோடி. இந்த ஊதியத்துக்கான எந்த வேலையும் நான் அங்கு செய்வதில்லை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைவான வேலைகளையே நான் செய்துள்ளேன். வெறும் 3 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை செய்ய 3 மாதங்கள் எடுத்துள்ளேன். என்னுடைய வேலை நேரத்தில் பெரும் பகுதி அலுவலக மீட்டிங்களுக்கே கழிந்து விடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக ஊதியம் பெறுகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு வைரலான நிலையில், சிலர் ஆதரித்தும் சிலர் விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

