அதிவேக சைக்கிள் பயணம்; அமெரிக்க பெண்மணியின் 'அடேங்கப்பா' சாதனை!
அதிவேக சைக்கிள் பயணம்; அமெரிக்க பெண்மணியின் 'அடேங்கப்பா' சாதனை!
ADDED : செப் 13, 2024 08:11 AM

வாஷிங்டன்: உலகம் முழுவதும் வேகமாக சைக்கிள் ஓட்டிய பெண் என்ற உலக சாதனையை அமெரிக்காவின் வேல் வில்காக்ஸ் பெற்றார். இவர், மூன்றரை மாதங்களில் 21 நாடுகளுக்கு பயணம் செய்து, 18,125 மைல் துாரம் சைக்கிள் ஓட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் உலகெங்கும் பயன்பாட்டில் இருந்த சைக்கிள், இப்போது உடற்பயிற்சிக்கான சாதனமாக மாறி விட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தவிர்க்க விரும்பும் ஒரு சிலரும், உடற்பயிற்சி செய்வோரும், குழந்தைகளும் மட்டுமே சைக்கிள் ஓட்டும் நிலை இருக்கிறது. ஆனால், சைக்கிள் மீது காதல் கொண்டவர்கள் இன்னும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் அமெரிக்காவை சேர்ந்தவர், வேல் வில்காக்ஸ்.
தினமும் 175 மைல்கள்
அவர் 26.169 கி.மீ ( 18,125 மைல்கள்) சைக்கிள் பயணம் மேற்கொள்ள 108 நாட்கள் 12 மணி நேரம், 12 நிமிடம் எடுத்தார். இதனால் சைக்கிள் வீரர் ஜென்னி கிரஹாம் சாதனையை முறியடித்தார். இவர் தினமும் 175 மைல்கள் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். அவர் சிகாகோவில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கி, நியூயார்க் வரை சென்றுள்ளார்.
வேல் வில்காக்ஸ் சொல்வது என்ன?
கின்னஸ் விதிகளின்படி, ஒரு சைக்கிள் ஓட்டுபவர் குறைந்தபட்சம் 18 ஆயிரம் மைல்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து வேல் வில்காக்ஸ் கூறுகையில், ''சில நேரங்களில் நான் உலகம் முழுவதும் சவாரி செய்கிறேன் என்பதை மறந்து விடுவேன். சைக்கிளில் ஏறி அமர்ந்து விட்டால் போதும்; பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி,'' என்று கூறியுள்ளார்.

