200 பேர் பலியான நிலையில் பிலிப்பைன்சை மிரட்டுது மற்றொரு புயல்
200 பேர் பலியான நிலையில் பிலிப்பைன்சை மிரட்டுது மற்றொரு புயல்
ADDED : நவ 10, 2025 03:45 AM

மணிலா: சில நாட்களுக்கு முன் தாக்கிய கல்மேகி புயலின் தாக்கத்தில் இருந்து இன்னமும் முழுமையாக வெளி வராத நிலையில், பிலிப்பைன்சை மீண்டும் ஒரு சூப்பர் புயல் நெருங்கி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், கடந்த வாரம் கல்மேகி புயல் தாக்கியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிர்கதியாகியுள்ளனர். இதையடுத்து, அந்நாட்டு அரசு இந்த பேரிடரை அவசரநிலையாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது, பிலிப்பைன்சை நோக்கி மற்றொரு புயல் நெருங்கி வருகிறது.
பங் - வாங் எனும் அப்புயல் தற்போது சூப்பர் புயலாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, புயல் அபாயத்தில் சிக்கும் கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளது. இப்புயல் மணிக்கு 185 முதல் 230 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்புயலால் பலத்த மழை மற்றும் காற்று வீசும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கடற்கரைகளில், 10 அடி உயரத்திற்கு ஆபத்தான கடல் அலைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இப்புயல் இன்று அதிகாலை, மத்திய லுாசன் தீவில் உள்ள அரோரா அல்லது இசபெலா மாகாணத்தின் கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை, தற்போதைய புயல் நெருங்கும் நிலையிலும் அமலில் உள்ளது.

