இந்தியாவுக்கு அச்சுறுத்தல்; ரொம்ப கவனமா இருக்கணும்; சொல்வது யாருன்னு பாருங்க!
இந்தியாவுக்கு அச்சுறுத்தல்; ரொம்ப கவனமா இருக்கணும்; சொல்வது யாருன்னு பாருங்க!
ADDED : செப் 19, 2024 06:16 PM

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தை கையாள இந்தியா சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பாராட்டி உள்ள எப்ஏ.டி.எப்., அமைப்பு, அதேநேரத்தில் பண மோசடி வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் எனக்கூறி உள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, 'ஜி-7' அமைப்பை சேர்ந்த நாடுகளால் எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு 1989ல் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பானது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து கூறியுள்ளதாவது:பணமோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க இந்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகள் நல்ல பலனை கொடுத்தது. நிதி புலனாய்வு தகவல்களை நல்ல முறையில் பயன்படுத்திய இந்திய அதிகாரிகள் அதனை வெளிநாடு மற்றும் உள்நாட்டிலும் பகிர்ந்து கொண்டு உள்ளனர்.
டிஜிட்டல் பரிமாற்றம் காரணமாக இந்தியாவில் வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் நிதி வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது; பணமோசடியையும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதையும் கணிசமாக தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க முடிந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் வளர்ந்து வரும் நேரத்தில், ஆட்கடத்தல், போதை கடத்தல், பண மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விவகாரத்தில் இன்னும் கூடுதலான கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க வேண்டும்.
காஷ்மீர், அதை சுற்றிய பகுதிகளில் ஐ.எஸ்., மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

