இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
UPDATED : ஏப் 04, 2025 04:11 PM
ADDED : ஏப் 04, 2025 03:14 PM

பாங்காக்: '' இந்தியா - வங்கதேச உறவில் தற்போது நிலவும் சூழலை கெடுக்கும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்,'' என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி பிம்ஸ்டக் மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் இடையே அவர், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசை சந்தித்தார்.
இச்சந்திப்பு தொடர்பாக நிருபர்களிடம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: ஜனநாயக முறைப்படி நிலையான அமைதியான மற்றும் வளர்ச்சியடைந்த வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என பிரதமர் உறுதி அளித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனக்கூறியதுடன், இரு நாடுகளுக்குமான நீண்ட கால ஒத்துழைப்பு மூலம் மக்களுக்கு அதிக நன்மை கிடைத்துள்ளது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டு காட்டினார். இதே நிலைப்பாட்டில் வங்கதேசத்துடன் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான உறவை உருவாக்க இந்தியா விரும்புகிறது.
இரு நாடுகளுக்கு உறவில் தற்போது நிலவும் சூழலை கெடுக்கும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். எல்லையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ, சட்டவிரோதமாக ஊடுருவதை தடுக்க சட்ட அமலாக்கலை கடுமையாக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் கவலையை முகமது யூனுஷிடம் பகிர்ந்து கொண்ட பிரதமர் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன், சீன அதிபர் ஜின் பிங்யை சந்தித்த முகமது யூனுஸ்,' இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டு உள்ளன. அவை வங்கக்கடலை அணுகுவதற்கு வழியே இல்லை. எனவே, இந்த பகுதிகள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலனாக வங்கதேசம் உள்ளது. அதனால், வங்கதேசத்தில், சீனா அதிக முதலீடுகளை செய்து, உற்பத்தி சந்தைப்படுத்துதலை அதிகரித்தால், நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் ' எனக்கூறியிருந்தார். இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.