கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரசார பாடல்
கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரசார பாடல்
ADDED : அக் 13, 2024 03:45 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, அதிபர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் களம் காண்கிறார்.
அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, தற்போது துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆசிய- அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தன் ஆதரவை அளித்துள்ளது.
இதையடுத்து, கமலா ஹாரிசின் பிரசாரத்திற்கு நிதி திரட்டுவது, வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, தெற்காசிய மற்றும் இந்திய வாக்காளர்களை கவரும் வகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக, பிரசார நிகழ்வில் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்த, பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானை ஏ.ஏ.பி.ஐ., எனப்படும் ஆசிய -அமெரிக்க, பசிபிக் தீவு பகுதிகளின் வெற்றி அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் முன்னோட்டமாக ஏ.ஆர்.ரஹ்மான், 30 நிமிட பிரசார பாடலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ஏ.ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற பாடல்கள் மற்றும் கமலா ஹாரிசின் வாக்குறுதிகள் மற்றும் அமெரிக்கர்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பிரசார பாடல், யு - டியூப் சேனலில் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.