ADDED : ஜன 07, 2024 12:45 AM
டாக்கா, வங்கதேசத்தில், பயணியர் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி பிரமுகர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில், ஆவாமி லீக் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இங்கு, இன்று பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலை, பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பி., எனப்படும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி புறக்கணித்துள்ளது. 'ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தால் தேர்தல் நியாயமாக நடைபெறாது' என, அக்கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இந்நிலையில், நம் நாட்டின் மேற்கு வங்கத்தின் எல்லையில் அமைந்துள்ள, ஜெசூர் மாவட்டத்தின் பெனாபோல் நகரத்தில் இருந்து, நேற்று முன்தினம், 292 பயணியருடன், பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
இரவு 9:00 மணி அளவில், டாக்காவில் உள்ள கோபிபாக் பகுதியில் ரயில் வந்த போது, நான்கு பெட்டிகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதில் ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில், இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சியான பி.என்.பி.,யின் முக்கிய நிர்வாகிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பி.என்.பி., அறிவித்ததில் இருந்து, நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.