வங்கதேச முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் கைது 'வாரன்ட்'
வங்கதேச முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் கைது 'வாரன்ட்'
ADDED : ஏப் 11, 2025 04:13 AM

டாக்கா; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜேத் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் கைது 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஹசீனா ரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறினார். இவர் நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
இதையடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் அமைந்துஉள்ளது.
இதற்கிடையே, மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜெத் புதுல் மற்றும் அரசு அதிகாரிகள் 17 பேர் மீது அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையம், குடியிருப்பு நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக குற்றம்சாட்டியது.
அதில், 'டாக்கா அருகே உள்ள புர்பச்சல் என்ற இடத்தில் இருந்த அரசு நிலத்தை, தன் மகள் சைமா உள்ளிட்டோருக்கு ஷேக் ஹசீனா முறைகேடாக ஒதுக்கியுள்ளார். இதற்கு அப்போது பதவியில் இருந்த ராணுவ மற்றும் அரசு அதிகாரிகளும் உதவியாக இருந்தனர்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, டாக்கா சிறப்பு நீதிமன்றம், ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜேத் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது.