தலிபான்களுக்கு கைது வாரன்ட்: பெண்கள் அமைப்பு வரவேற்பு
தலிபான்களுக்கு கைது வாரன்ட்: பெண்கள் அமைப்பு வரவேற்பு
ADDED : ஜன 26, 2025 01:20 AM

காபூல்: தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதையடுத்து கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தலிபான் அமைப்பினரின் இந்த மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, தலிபான் மூத்த தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடா உட்பட இருவரை கைது செய்ய, சமீபத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது.
இந்த நடவடிக்கைக்கு, நீதி மற்றும் விழிப்புணர்வுக்கான ஆப்கானிஸ்தான் பெண்கள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துஉள்ளது.
இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு சிறந்த வரலாற்று முடிவை எடுத்துள்ளது. இதை, ஆப்கானிஸ்தான் பெண்களின் வலிமை மற்றும் விருப்பத்தின் அடையாளமாகக் கருதுகிறோம்.
'மேலும் இந்த நடவடிக்கை, நாட்டில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியின் புதிய அத்தியாயத்தை துவங்கும் என நம்புகிறோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

