அசாம் -- பூட்டான் முதல் ரயில் பாதை சிறப்பு ரயில்வே திட்டமாக அறிவிப்பு
அசாம் -- பூட்டான் முதல் ரயில் பாதை சிறப்பு ரயில்வே திட்டமாக அறிவிப்பு
ADDED : செப் 28, 2025 03:06 AM
திம்பு:அசாம் -- பூட்டான் இடையே அமைக்கப்பட உள்ள முதல் ரயில் பாதை, சிறப்பு ரயில்வே திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளதால், பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் அண்டை நாடான பூட்டானுக்கும், நம் நாட்டுக்கும் இடையே ரயில் பாதை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி, வடகிழக்கு மாநிலமான அசாமின் கோக்ராஜரில் இருந்து, பூட்டானின் கேலப்பு இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான விரி வான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ரயில் பாதை, 69.04 கி.மீ., துாரமுள்ளது. இதற்கு, 3,500 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் பாதையில், இரண்டு இடங்களில் மிக நீளமான பாலம் மற்றும் 29 பாலங்களும், பாலாஜன், குருபாசா, ரூனிகாடா, ஷாலிபுர், தாத்கிரி, கேலப்பு ஆகிய ஆறு புதிய ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே நில ஆய்வுகள் முடிக்கப்பட்டு, தற்போது விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ரயில்வே சட்டம் 1989ன் கீழ், இந்த திட்டத்திற்கு 'சிறப்பு ரயில்வே திட்டம்' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளதாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, பொது தேவைக்காக நிலம் கையகப்படுத்துதல் என்பது எளிதாகும். நிலம் கையகப் படுத்தும் சட்டப்படி, நிலம் கையகப்படுத்த 50 மாத கால அவகாசம் எடுக்கும் என்றால், சிறப்பு ரயில்வே திட்டப்படி 27 மாதங்கள் மட்டுமே ஆகும்.
மேலும் திட்டப்பணிகளை துரிதப்படுத்தவும் வழிவகுக்கும்.
நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் அசாம் -- பூட்டான் முதல் ரயில் பாதைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கும்.
இதன் வாயிலாக, இந்தியா -- பூட்டான் இடையே வர்த்தகம், சுற்றுலா வளர்ச்சி அடைவதுடன், இரு தரப்பு உறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.