சிரியாவில் துருக்கி எல்லையை ஒட்டிய நகரங்களில் தாக்குதல்
சிரியாவில் துருக்கி எல்லையை ஒட்டிய நகரங்களில் தாக்குதல்
ADDED : ஆக 11, 2011 12:30 AM
டமாஸ்கஸ் : சிரியாவில், அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் துருக்கி எல்லையை ஒட்டிய நகரங்களில், பீரங்கி தாக்குதல் தொடர்கிறது.
இந்நிலையில், துருக்கி வெளியுறவு அமைச்சர், சிரிய அதிபரைச் சந்தித்து, மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தினார். சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்கள், அரசு மூலம் அடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, துருக்கி எல்லையை ஒட்டி அமைந்துள்ள நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி நகரங்களான டைர் அல் ஜோர், டப்டனாஸ், செர்மின் மற்றும் பின்னிஷ் ஆகியவற்றில் புகுந்துள்ள ராணுவ பீரங்கிப் படை, தொடர்ந்து மக்கள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், துருக்கி வெளியுறவு அமைச்சர் அகமது டவுடொவுலு நேற்று முன்தினம் சிரிய அதிபர் அசாத்தை நேரில் சந்தித்து, மக்கள் மீதான பீரங்கி தாக்குதலை உடனடியாகக் கைவிடும்படி வலியுறுத்தினார். சிரியாவின் முக்கிய நட்பு நாடும், வர்த்தக கூட்டாளியுமான துருக்கியின் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதோடு, உலக நாடுகளும் சிரியா மீதான தங்கள் நெருக்குதலை அதிகரித்து வருகின்றன. சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் சிரியாவுக்கான தங்கள் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டன. இந்நிலையில், இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று, அதிபர் அசாத்தைச் சந்தித்து, வன்முறையைக் கைவிடும்படி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

