தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் எச்சரிக்கை: மேலும் ஒரு ஹிஸ்புல்லா கமாண்டர் பலி
தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் எச்சரிக்கை: மேலும் ஒரு ஹிஸ்புல்லா கமாண்டர் பலி
UPDATED : செப் 23, 2024 02:27 PM
ADDED : செப் 22, 2024 01:24 AM

பெய்ரூட்:லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் இப்ராஹிம் அஹில் கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒரு கமாண்டர் கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. இது போன்ற தாக்குதல் தொடரும் என, இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
மேற்காசிய நாடான லெபனானில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
உயிர்ச்சேதம்
இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் லெபனான் பயங்கரவாதிகளின் 3,000 பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில், 37 பேர் பலியாகினர்; 3,000 பேர் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது 140 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
இதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகளவு வசிக்கும் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில், இந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் அஹில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், 31 பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினரின் 100 ராக்கெட் ஏவுதளங்கள், 1,000 ராக்கெட் பேரல்கள், ஆயுதக் கிடங்கு ஆகியவையும் தகர்க்கப்பட்டன. இதை இஸ்ரேல் ராணுவம் நேற்று உறுதி செய்தது.
இது தொடர்பான அறிக்கையில், 'உளவுத் துறை தகவலின்படி பெய்ரூட்டில் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் எலைட் ராட்வான் படையின் கமாண்டர் இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார்.
'இவருடன், இந்தப் படையில் உள்ள மேலும் சிலரும் இறந்துள்ளனர். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தயாராகி வந்தனர்.
'இதைத் தடுக்க அவர்களின் ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகளை முழுமையாக அழித்துஉள்ளோம்.
'இஸ்ரேல் மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை இனிவரும் காலங்களில் தொடரும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டனம்
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு முக்கிய கமாண்டர் அகமது வகாபி என்பவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, பேஜர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரிவின் தலைவர் வோல்கர் டர்க், “இது சர்வதேச மனித உரிமை மீறலாகும். இந்த தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
யார் இந்த இப்ராஹிம் அஹில்?
ஹிஸ்புல்லா அமைப்பில், கடந்த 1980ல் சேர்ந்தவர் இப்ராஹிம் அஹில். லெபனானில் அதே ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய மக்கள் பிணைக்கைதிகளாக கடத்தப்பட்டனர். அதில் இப்ராஹிம் அஹிலுக்கு தொடர்பு இருந்த தாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1983-ம் ஆண்டு லெபனானில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதில், நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில், இப்ராஹிம் அஹிலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இதனால், அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, 70 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.