ஷேக் ஹசீனா மகளை டிஸ்மிஸ் பண்ணுங்க; உலக சுகாதார நிறுவனத்துக்கு வங்கதேசம் நெருக்கடி
ஷேக் ஹசீனா மகளை டிஸ்மிஸ் பண்ணுங்க; உலக சுகாதார நிறுவனத்துக்கு வங்கதேசம் நெருக்கடி
UPDATED : ஜன 27, 2025 06:24 PM
ADDED : ஜன 27, 2025 06:00 PM

டாக்கா: உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனராக இருக்கும் ஷேக் ஹசீனாவின் மகளை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கும்படி வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, அந்நாட்டில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டத்தால் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் முகமது யூனுாஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசு, ஷேக் ஹசீனாவை தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்நாட்டு நீதிமன்றங்களில், ஹசீனாவுக்கும், அவரது கட்சியினருக்கும் கைது வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனராக இருக்கும் ஹசீனாவின் மகள் சாய்மா வாஜித்தை நீக்கும்படி, அந்த அமைப்புக்கு வங்கதேசம் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது.டில்லியில் வசிக்கும் சாய்மா வாஜித், அடிப்படையில் ஒரு டாக்டர். நரம்பியல் கோளாறுகள் தொடர்பான சிறப்பு மருத்துவர். இவர் கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் தான் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
தற்போது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்துள்ளதால், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி வங்கதேச வெளியுறவு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. எனினும் அதற்கு வாய்ப்பில்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஐ.நா., அமைப்பு விதிகளின்படி, ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டவர், தன் சொந்த தகுதியால் தான் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். குறிப்பிட்ட அந்த நாட்டில் அரசு கவிழ்ந்தாலும், அவர் தன் பதவிக்காலம் முடியும் வரை அந்த பதவியில் நீடிப்பார்' என்று, வங்கதேச வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

