ஹசீனாவை நாடு கடத்த 'இன்டர்போல்' உதவியை நாடுகிறது வங்கதேச அரசு
ஹசீனாவை நாடு கடத்த 'இன்டர்போல்' உதவியை நாடுகிறது வங்கதேச அரசு
ADDED : நவ 11, 2024 03:30 AM

டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கு, 'இன்டர்போல்' உதவியை நாட வங்கதேச இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஜூலையில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர். வன்முறையை கட்டுப்படுத்த முடியாததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சமடைந்துஉள்ளார்.
இதற்கிடையே, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. கடந்த 15 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தன் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஹசீனாவை கைது செய்து நவ., 18ம் தேதிக்குள் ஆஜர்படுத்த வங்கதேசத்தில் செயல்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை நாட வங்கதேச இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு சட்ட விவகாரங்கள் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் நேற்று கூறுகையில், “தப்பியோடிவர்கள் உலகில் எங்கு மறைந்திருந்தாலும், அவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்,” என்றார்.