ADDED : அக் 04, 2024 12:09 AM
டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, தன் பிரதமர் பதவியை ஆக., 5ல் ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. உள்நாட்டு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் இடைக்கால அரசு, துாதரக அளவிலும் மாற்றங்களை செய்து வருகிறது.
இதன்படி, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான வங்கதேச துாதர்களை, அந்நாட்டு அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது.
தற்போது இரண்டாம் கட்டமாக, இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் உள்ள வங்கதேச துாதர்களை, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மேலும், ஐ.நா.,வுக்கான நிரந்தர துாதரையும் அந்நாட்டு அரசு திரும்ப பெற்றுள்ளது. இதன்படி, டாக்காவுக்கு விரைவில் வரும்படி, இந்தியாவுக்கான வங்கதேச துாதர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.