ஷேக் ஹசீனாவை கைது செய்ய 'இன்டர்போல்' உதவியை கேட்கிறது வங்கதேசம்
ஷேக் ஹசீனாவை கைது செய்ய 'இன்டர்போல்' உதவியை கேட்கிறது வங்கதேசம்
ADDED : நவ 20, 2025 07:01 AM
டாக்கா: மரண தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த, வங்கதேச இடைக்கால அரசு, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை நாட உள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அப்போதைய பிரதமரும், அவாமி லீக் கட்சி தலைவருமான ஷேக் ஹசீனா, வன்முறையைக் கட்டுப்படுத்த சுட உத்தரவிட்டதே காரணம் என, குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புக்குப் பின், தற்போது டில்லியில் உள்ள ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு, வங்கதேச இடைக்கால அரசு மத்திய அரசிடம் கேட்டது. இதற்கு மத்திய அரசு நேரடியாக பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச இடைக்கால அரசு 'இன்டர்போல்' உதவியை நாட முடிவு செய்துள்ளது.

