8 ஆண்டுக்கு முன் கொலை செய்தவரை நாடு கடத்த அமெரிக்கா கோரிக்கை
8 ஆண்டுக்கு முன் கொலை செய்தவரை நாடு கடத்த அமெரிக்கா கோரிக்கை
ADDED : நவ 20, 2025 07:01 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில், எட்டு ஆண்டுகளுக்கு முன் ஆந்திரப் பெண் மற்றும் அவரது மகன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், டி.என்.ஏ., பரிசோதனை மூலம் தற்போது துப்பு துலங்கியுள்ளது. கொலையாளியை ஒப்படைக்கும்படி, மத்திய அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை அனுப்பி உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சசிகலா நர்ரா, 38; மகன் அனிஷ், 6; மற்றும் கணவர் ஹனு நர்ராவுடன் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தார்.
கடந்த 2017ல், சசிகலாவும், அவரது மகனும், அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப் பட்டு கிடந்தனர்.
குற்றம் நடந்த இடத்திலிருந்து கிடைத்த ரத்த மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். அதில் ஒரு ரத்த துளி, கொலையாளியின் ரத்த மாதிரி என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, சசிகலாவின் கணவர் ஹனு நர்ராவுடன் பணியாற்றிய நசீர் ஹமீத் மீது சந்தேகம் எழுந்தது.
மேலும் நசீர் ஹமீத், கொலை நடந்த ஆறு மாதத்தில் இந்தியா திரும்பியதும், சந்தேகத்தை அதிகரித்தது.
இதையடுத்து, டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை செய்வதற்காக மாதிரிகளை தரும்படி அவரிடம் அமெரிக்க விசாரணை அமைப்பு கேட்டது; ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அமெரிக்காவில் நசீர் ஹமீத் பணியாற்றிய, 'காக்னிசென்ட்' நிறுவனத்தில் அவர் பயன்படுத்திய லேப்டாப் பெறப் பட்டது.
அதில் இருந்து கைரேகைகளை பரிசோதித்தபோது, ரத்த மாதிரியுடன் ஒத்துப் போனது.
இதையடுத்து, அவரை நாடு கடத்தி விசாரிக்க உதவும்படி, மத்திய அரசுக்கு, எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு கோரியுள்ளது.
எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. பணியிடத்தில் ஹனு மற்றும் நசீருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

